Friday, 10 August 2012

பரமனை பற்றுங்கள்

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்

உங்கள் வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெற விரும்பினால், சிவபெருமானைப் பற்றுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும்.

அறன் வலியுறுத்தல்

அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுண்மின் தலைப்பட்ட போதே.
- திருமூலர்


அடுத்தவரைப் பார்த்து வீண் பொறாமைக் கொண்டு அவரை அவதூறாகப் பேசாதீர்கள். தருமமற்ற வழியில் செல்லாதீர்கள். பெரும் கோபக்காரனாக மாறாதீர்கள். எந்நிலையிலும் அநியாய வழியில் பிறர் பொருளை அடைய நினைக்காதீர்கள். செல்வந்தனாக வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாராவது பசி என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரு கரண்டி (தவ்வி) உணவையாவது மனமுவந்து இடுங்கள்.

நியமத்தில் நிற்பவன்

தூய்மை அருளூண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமி யீரைந்தும் நியமத்தனாமே
- திருமூலர்


நியமத்தில் நிற்பவனுக்கு அகம்-புறம் (1)தூயதன்மை, (2)அருள், (3)சுருங்கிய உணவு, (4)பொறுமை, (5)நேர்மை, (6)உண்மை, (7)உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்தும், (8)காமம், (9)களவு, (10)கொலை என்னும் இத்தீயவைகளை ஒதுக்குவதும் திருமூலர் கூறும் பத்து விதிகளாகும்.

சிவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை

சிவனோ டொக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தாமரையானே
- திருமூலர்

சிவாய நம

சிவாயநம வெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தமாமே
- திருமூலர்

‘சிவாய நம’ என்று உள்ளத்து வெளியே செல்லாது மனதை ஒருநிலை படுத்தி சொல்லி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கி, சிவத்துக்கு அடிமையாக்கி, ‘சிவாய சிவ சிவ’ என்று பலமுறை சித்தத்தில் எண்ணினால் அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும்.

ஐந்தெழுத்து காட்டும் அருள்நெறி

குருவழியாய குணங்களில் நின்று
கருவழியாய கணக்கை அறுக்க
வரும் வழிமாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவதுஞ் செழுத்தாமே
- திருமூலர்  

ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிகளுக்கு காரணமான வினைகளை ஒழிக்க, அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள்நெறியைக் காட்டுவது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தாகும்.

இறப்பிற்கு பின்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
 - திருமூலர்

(தானம், தவம், தர்மம் செய்யாத) ஒருவர் இறந்த பின்னர், அவரது உறவினரெல்லம் கூடி, அழுதிட்டு, அவரை பிணம் என்று அழைத்து, இடுகாட்டில் வைத்து எரித்து விடுவர். எரிந்த சாம்பலை ஆறிலோ, கடலிலோ கலந்து அதனுடன் இறந்தவரை மறந்து விடுவர். மற்றவர்களுக்கு நன்மை ஏதும் செய்யாதவர்களுக்கு (இறப்பிற்கு பின்) ஏற்படும் நிலையை திரூமூலர் எடுத்துரைக்கிறார்.

Thursday, 9 August 2012

ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்துதம் அஞ்சகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்ஞாது இறைவனை எய்தலும் ஆமே.
- திருமூலர்.

அஞ்சகம் என்பது உடல். அடவி(குகை) என்பது மனம். ஐந்து சிங்கங்கள் என்பவை கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்பொறிகளாகும்.

ஒவ்வொரு மனிதனின் மனங்களுக்குள்ளும் ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. காட்டுக்குள் போய் மேய்ந்து விட்டுப்பின் இந்த ஐந்து சிங்கங்களும் தத்தம் மனமாகிய குகைக்குள்ளேயே வந்து தங்கி விடும். இந்த ஐந்து சிங்கங்களின் நகத்தையும், பல்லையும் அறுத்து எறிந்துவிட்டால் அஞ்சாமல் நாம் இறைவனை அடைந்திடலாம்.

ஐம்பொறிகளினால் ஏற்படும் ஆசைகளை நாம் இறைப்பற்றின் மூலம் அறுத்தெறிந்து விட்டால் கலங்காமல் நாம் இறைவனைக் காணலாம்.

இல்லறத்தில் துறவறம்

பள்ளம் முத்நீர் பழகிய மீன் இனம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோடு ஆடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே
- திருமூலர்

ஆழமான நீர்நிலைகளில் இருந்து பழகிய தண்ணீருக்குள்ளேயே இருக்கின்ற மீன் இனங்கள் புதிதாக வந்த நீரிலே நீந்தித் திளைக்க விருப்பம் கொள்ளும். அதுபோல, இல்லற வாழ்வில் ஈடுபட்டு மங்கையுடன் கூடி இன்பமாக வாழ்ந்தாலும் உயர்ந்த குணமுடைய பெரியோர்களின் உள்ளமானது எப்பொழுதும் இறைவனிடம் கொண்ட பற்றை விடாது பற்றி இருக்கும்.

தாமரையின் தண்டு நீரில் மூழ்கி இருந்தாலும் அதன் இலையில் நீர் ஒட்டாதது போல, இல்லற வாழ்வில் திளைத்திருந்தாலும் ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல் வாழ இயலும். தன் மனைவி, மக்களுடன் இன்பமாய் வாழ்ந்து கொண்டே இறைவனடியார்களுக்குத் தொண்டு செய்து முக்தி அடைந்த ஞானிகள் - அப்பூதி அடிகளார், இளையான் குடிமாற நாயனார், தாயுமானவர்.

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தம் சிவமாகவே சித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
-திருமூலர்

சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஓதி சிவமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை. சித்தம் சிவமாகி பேரானந்தம் பொருந்திய அடியார்தம் உறவும் வாய்த்திடில் சித்தியும் உண்டு, முக்தியும் உண்டு. சிவனை எண்ணி சிவமாதலே தவத்தின் பயனாகும்.

தாச மார்க்கம்

எளிஅனல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பல் மஞ்சணம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
- திருமூலர்

மக்கள் அனைவரும் எளிதாகச் செய்யும் திருவிளக்கு ஏற்றுதல், பூக்களைப் பறித்துவந்து இறைவனுக்குச் சூட்டுதல், இறைவன் உறையும் திருக்கோயிலை அன்புடன் சாணமிட்டு மெழுகுதல், கோயிலுக்குள்ளிருக்கும் குப்பைகளை அகற்றுதல், வாயார இறைவனின் திருநாமத்தைப் பாடிப் பரவுதல், பூஜை நேரங்களில் கோயில் மணியை ஒலித்து இறைவனை வணங்குதல், பல வகையான திருமஞ்சனம், அபிஷேகப் பொருள்களை சேகரித்தல், கோயில் திருப்பணிகளில் இறங்குதல் போன்றவை இறைவனுக்கு அடிமையாக (தாசனாக) இருந்து நாம் செய்ய வேண்டிய செயல்களாகும். இவ்வெளிய செயல்களை நாம்  அன்றாடம் செய்வதால் இறைவனை அடையலாம் என்பதாகும்.

இறைவனை சகமார்க்கம், சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என நான்கு வழிகளில் வழிபடலாம். இவற்றுள் திருமூலர் மேற்காணும் பாடலில் சொல்லியிருக்கும் மார்க்கமானது இறைவனுக்கு அடிமையாய் இருந்து செய்யும் தாசமார்க்கமாகும்.

ஈசன் இருக்கும் இடம்

வானுக்கு ளீசனைத் தேடும் மருளர்காள்
தேனுக்கு ளின்பம் சிவப்போ கருப்போ
தேனுக்கு ளின்பம் சிறந்திருந் தாற்போல்
ஊனுக்குள்  ஈசன் ஒளிந்திருந் தானே.
-திருமூலர் 

வானத்துக்குள்ளே இறைவன் மறைந்துள்ளான் என்று தேடும் மூட மானிடர்களே! தேனுக்குள் இருக்கும் இனிமை சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்று சொல்லுங்கள். கறுப்பும்,சிவப்பும் என் எந்த நிறமும் இல்லாத தேனின் சுவையைப் போலவே, நம் உடலிலே ஆன்மாவுடன் கலந்து இருக்கும் இறைவனும் இனிமையானவன். அவனை வானில் தேடாதீர்கள். உங்கள் ஊனில்(உடலில்) தேடுங்கள்.

சித்தர்கள் தங்கள் உடலில் உள்ள குண்டலினி சக்தியை படிப்படியாக மேலேற்றி இரண்டு புருவ மத்திக்குக் கொண்டு வருகிறார்கள். அகக் கண்களால் அங்கே இறைவனைக் காண்கின்றனர். இச்செயல் சித்தர்களுக்கு மட்டுமே கைவரக்கூடியது. இதனால்தான் திருமூலரும் 'ஊனுக்குள்  ஈசன் ஒளிந்திருந் தானே.' என்கிறார்.

சேர்க்கும் செல்வத்தினால் வரும் தீமை

ஈட்டிய தேன் பூமணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரத்திட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
- திருமூலர்

தேனீக்கள் பூக்கள் வாசனையும், சுவையும் அறிந்து அம்மலர்களிலிருந்து இனிக்கும் தேனை உறிஞ்சிக் கொணர்ந்து உச்சி மரக்கிளையிலே கூடுகட்டி பாதுகாப்பாக வைத்துவிடும். அம்மரத்தின் கிளையில் சுவை மிகுந்த தேன் இருப்பதை அறிந்த, வண்டுகளை விட வலிமையான மனிதர்கள், தீயிட்டு தேனீக்களைத் துரத்திவிட்டு அந்தத் தேனை தாம் அபகரித்துக் கொள்வர்.

தேனீக்கள் கட்டிய கூட்டை மனிதர்களுக்குத் தாமே காட்டிக் கொடுத்துத் தேனை இழந்து, உயிரையும் விடுவது போலவே, பாடுபட்டுத் தேடி வைக்கும் பணமும் ஒரு நாள் கள்வர்களின் வசமாகும். எனவே பொருளைத் தேடிச் சேர்க்காதீர். அதனைப் பலருக்குப் பயன்படச் செல்விடுக என்கிறார் திருமூலர்.

தேனீக்களால் பாடுபட்டு சேர்க்கப்பட்ட தேனே அந்தத் தேனீக்களின் உயிருக்கு எமனாய் அமைந்தது போல, நாம் சேர்க்கும் பணமே நமக்கு எமனாய் அமைந்து விடும் என்று எச்சரிக்கவும் செய்கிறார் திருமூலர்.