Friday, 19 October 2012

ஆத்மஞானம்


நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

பிறவிகள்: இறைவனின் ஆணைப்படி நான் பிறப்பெடுக்க வேண்டும். எடுக்கும் பிறவிகளில் சில நிலைகள் உண்டு. முதல் நிலை ஓரறிவு (தொடுணர்வு) படைத்த புல்பூண்டு, மரங்கள். இரண்டாம் நிலை ஈரறிவு (சுவையுணர்வு) கொண்ட நீந்துவன. மூன்றாம் நிலை மூன்றறிவு (நுகர்வுணர்வு) கொண்ட ஊர்வன. நான்காம் நிலை நான்கறிவு (பார்க்கும் திறன்) கொண்ட பறப்பன. ஐந்தாம் நிலை ஐந்தறிவு (செவியுணர்வு) கொண்ட விலங்கினம்.

பல பிறவிகள் எடுத்து ஐந்து நிலைகள் கடந்து எடுக்கும் பிறவி மனிதப்பிறவி. இப்பிறவிகளில் எல்லாம் இயற்கையின் நியதிக்கு உட்ப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம். இயற்கையுடன் இயைந்து வாழ்வதால் ஆனந்தம் மட்டுமே.

நான் எடுக்கும் உடல்களில் ஆதார சக்தியாய் விளங்குபவன் நானே. தன்னிச்சையாய் செய்யப்படும் காரியங்களுக்கு (சுவாசிப்பது, செரிப்பது, இருதயம் துடிப்பது, இரத்தம் ஓடுவது) சக்தி வழங்குவது நானே.

மனிதப்பிறவி: நான் எடுக்கும் பிறவிகளிலே மிகவும் உன்னதமான பிறவி மனிதப்பிறவி ஆகும். ஏனென்றால், இப்பிறப்பின் மூலம் இறைவனை அடையலாம். மனிதப்பிறவி எடுக்கும்பொழுது மட்டும், மனம் (மனஸ்-மனுஷன் - மனிதன்) என்ற ஒரு வஸ்து உருவாகிறது. இதுவே ஆறாம் நிலை என்ற ஆறாம் அறிவு (பகுத்தறிவு) ஆகும்.

மனம்: மனம் என்பது எண்ணக்குவியல். வாயின் மூலம் வலை கட்டி அவ்வலையிலே இருக்கும் சிலந்தி போல மனது. எண்ணத்தை தோற்றுவித்தும், அவ்வாறு தோன்றிய எண்ணங்களில் கிடப்பதும் மனமே.

மனம் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம் மற்றும் சாபம் ஆகும். மனமிருப்பதால் எண்ணமுடியும், எண்ணியதை ஐம்புலன்களினால் அடைய முடியும். அதனால் மனமென்பது வரமாகும். மற்ற உயிரனங்களுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் பகுத்தறிவு.

ஆனால், இந்த மனத்தில் தோன்றும் முதன்மையான எண்ணங்களில் ஒன்று, ‘நான்’ என்ற ஆணவம். ‘நான் ஆத்மா அல்ல, இந்த உடலே நான்’ என்ற எண்ணமே!. இதுவே சாபம்! இந்த ஆணவத்தினால் செய்யப்படும் வினைகளினால் வினைப்பயன் (கர்மா) என்னை தொற்றிக்கொள்கிறது. நிலையாகிய இறைவனையும், ஆத்மாவாகிய என்னையும் மறந்து, இந்த உடலே நிலையானது, உடலால் அனுபவிக்கும் இன்பமே நிலையானது என்ற எண்ணம் வலுக்கிறது. இந்த எண்ணமே மாயை. ஆக தூய ஆன்மாவாகிய நான் மனித உடலெடுத்ததும் ஆணவம், கன்மா, மாயை என்ற மும்மலங்கள் சூழ்கின்றன. இந்த மலங்களை என்னிடம் இருந்து களைய நான் பலப்பல பிறப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.
மனத்தின் இயல்பு கேட்க மட்டுமே தெரியும். என் இயல்பு கொடுக்க மட்டுமே தெரியும். மனம் உலக ஆசையில் ஈடுபட்டு, என்னை மறந்து, ஐம்புலன்களையும் தன் இஷ்டப்படி ஆட்டுவித்து உவகை கொள்ளும். உவகை இல்லாத நிலையில், கவலை கொள்ளும். உவகை அடைந்து முடித்த பின்னர், மற்றொரு ஆசையை தேடி ஓடும். மனதின் ஆசைகளுக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கும் எல்லையில்லை.
ஆத்ம திருப்தி:கொடுக்க மட்டுமே தெரிந்த எனக்கும், கேட்க மட்டுமே தெரிந்த மனதிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் மனிதன் இழப்பது அமைதி/நிம்மதி. ஆத்மா, மனம், உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டால் வாழ்க்கை இனிமையானதாய் இருக்கும். ஆனால் பல மனிதர்களின் வாழ்வில் இம்மூன்றூம் வெவ்வேறு வழியில் பயணப்படுகிறது. ஆகையால்தான், மனித வாழ்வில் பல துயரங்கள், துன்பங்கள்.
உதாரணத்திற்கு, கர்ணனின் கடமை தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை காப்பதும், அவர்கள் கேட்பதை அளிப்பதும். தன்னை எதிர்ப்பவர்கள் தனது தம்பிகள் என்று அறிந்தும், தன்னிடம் தஞ்சம் புகுந்த துரியோதனனை காத்தான். கிருஷ்ணனிடம் புண்ணியத்தின் பலனை தானம் செய்து மோட்சம் அடைந்தான்.
இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு காரண காரியத்திற்காக / கடமை செய்ய இவ்வுலகில் மனித பிறவி எடுக்கின்றன. அது என்ன கடமை என்று அறிய மனிதன் முற்பட வேண்டும். அதை அறிந்து, அந்த கடமையை செய்தால் ஆத்மதிருப்தி கிடைக்கும். மனித வாழ்வும் இனிமையாய், பயனுள்ளதாய், ஆனந்தமயமாய் இருக்கும்.
ஆத்ம ஞானம்: இவ்வுலகில் மனதின் ஆசையை நிறைவேற்றி கொள்ள ஓடும் மனிதர்கள் எல்லோரும் ஆறாம் நிலையில் இருக்கிறார்கள். அப்படி தெறிக்கட்டு ஓடும் மனதை அடக்கி, ‘நான் ஒரு ஆத்மா’ என்று உணர்பவர்கள் ஏழாம் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருந்தவர்கள், மனோநாசம் செய்து, எண்ணங்களற்ற நிலையில் இருந்த இரமணர். ‘ஆசைகளே துன்பத்திற்கு காரணம்’ என்று கூறி ஆசைகளை துறந்து, ஆன்ம நிலையான அன்பின் வடிவமாய் இருந்த புத்தர்.
ஆத்ம திருப்தி அடைந்து, இந்த ஏழாம் நிலையை அடைய வேண்டியதுதான் மனிதப்பிறவி எடுத்த எனது நோக்கம்.

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?


தீயவன் சுகப்படுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு கருமி இருந்தான். எச்சில் கையால் காக்கை கூட ஓட்ட மாட்டான். அவனுக்கு மாத சம்பளம் ஆயிரம் ரூபாய் தான். சுயநலமாய் வீட்டின் செலவிற்கு சிறிது பணத்தை கொடுத்து விட்டு, மற்றவற்றை தீய வழியில் செலவழித்து வந்தான். ஜாதகப்படி அவனுக்கு நல்ல நேரம் துவங்கியது. இறைவன் கருணையினால் மாத சம்பளம் பத்தாயிரம் ஆனது. 'ஆயிரம் ரூபாய் கொடுப்பதால்தான் அவனால் நல்ல வழியில் பணத்தை செலவு செய்ய இயலவில்லை போலும்', என்று நினைத்த இறைவன் அவனை நல்வழிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். ஆனால் அவனோ பத்தாயிரம் ரூபாயும் தீய வழியில் செலவழித்து மீண்டும் இறைவனிடம் மன்றாடினான். கருணைக்கடலாகிய இறைவனும் இரக்கம் கொண்டு அவன் மாத சம்பளத்தை ஒரு இலட்சம் உயர்த்தினார். ஆனால் அவனுக்கோ தலை-கால் புரியவில்லை 20 நாளிலேயே ஒரு இலட்சத்தை செலவு செய்து கடனும் வாங்க தொடங்கி விட்டான். இத்தனை சந்தர்ப்பம் கொடுத்தும் அவன் திருந்தவில்லையே என்று இறைவனும் மனம் நொந்து 'எல்லாம் விதிப்படி நடக்கட்டும்' என்று கூறி அவன் மேல் விழுந்த அருட்பார்வையை குறைத்து கொண்டார(இறைவனது அருட்பார்வையிலிருந்து யாரும் எப்பொழுதும் இம்மியளவும் விலக முடியாது). ஜாதகப்படி நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும் அவனுக்கு துவங்கியது. அந்த கெட்ட நேரத்தில் கடனாலும், தீய பழக்க வழக்கத்தால் வந்த நோயாலும் அவன் பட்ட துயரத்தை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "கெட்டவங்களுக்கு ஆண்டவன் (நல்ல நேரத்தில்) அள்ளி கொடுப்பான். ஆனா கைவிட்டு விடுவான்."

தீயவன் சுகப்பட காரணம், அது இறைவன் அவனுக்கு கொடுக்கும் சந்தர்ப்பம்/வாய்ப்பு. இந்த சந்தர்ப்பத்திலாவது அவன் திருந்தி நல்வழிப்படவேண்டும் என்பது இறைவனின் ஆசை. 

நல்லவன் துன்பப்படுவது ஏன்?

அதே ஊரில் ஒரு நல்லவர் இருந்தார். தான் சுயமாய் நேர்வழியில் சம்பாதிக்கும் வருமானத்தில் 20 சதவிகிதம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாத சம்பளம் ஒரு இலட்ச ரூபாய். பத்தாயிரத்தை வீட்டு செலவிற்கு கொடுத்து விட்டு, இருபதாயிரத்தை மக்கள் தொண்டுக்கு செலவு செய்து வந்தார். மீதத்தை குழந்தையின் கல்விக்காக சேமித்து வந்தார். நல்லவர்களுக்குத்தான் துயரம் தந்தியில் வருமே. அவருக்கும் ஜாதக்கப்படி கெட்ட நேரம் வந்தது. இறைவனும், இவர் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர் என்று அறிய முற்பட்டார். சம்பளத்தை பத்தாயிரமாய் குறைத்தார். ஆனால் அந்த நேரத்திலும், அந்த நல்லவர் 2000 ரூபாய் மற்றவர்களுக்கு கொடுத்து வந்தார். இறைவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். சும்மா விடுவாரா? அவர் சம்பளத்தை குறைத்து 1000 ரூபாய் ஆக்கினார். இறைவன் விடாகண்டனாய் இருந்தால், அந்த நல்லவரும் கொடாகண்டனாய் இருந்தார். இலட்சியத்தில் இருந்து விலகாமல் 200 ரூபாய் கொடுத்து வந்தார். வீட்டின் செலவிற்கு அவரது சேமிப்பு உறுதுணையாய் இருந்தது. கெட்ட நேரம் முடியும் தருவாயில், கடைசி மாத சம்பளமாய் நூறு ரூபாய் மட்டும் அந்த நல்லவருக்கு கிடைத்தது. இந்த சம்பளமாவது கொடுத்து இருபது ரூபாய் மற்றவர்களுக்கு கொடுக்க வாய்ப்பளித்து, தனது இலட்சியத்திலிருந்து வழுவாமல் காத்தமைக்காக அந்த நல்லவர் இறைவனுக்கு நன்றி கூறினார்,  

அந்த நல்லவருக்கு கெட்ட நேரம் முடிந்து நல்ல நேரம் தொடங்கியது. அபூர்வமான, அட்டகாசமான ஒரு தொடக்கத்தை இறைவனுக்கு அவருக்கு அருளினார். அதையும் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "நல்லவங்களை ஆண்டவன் (கெட்ட நேரத்தில்) சோதிப்பான். ஆனா (எப்பொழுதும்) கைவிட மாட்டான்."

நல்லவர்கள் துன்பப்பட காரணம், அது இறைவன் அவர்களுக்கு வைக்கும் ஒரு சோதனை. 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலும், இத்தகைய சோதனைகளையும், கொண்ட இலட்சியத்தில் இருந்து மாறாத அவர்களது மன உறுதியையும் காணலாம். 

இத்தகைய சோதனைகளை இறைவன் நடத்த இரண்டு காரணங்கள் உண்டு. 
1. அவன் உண்மையிலையே நல்லவன் தானா, அல்லது ஊருக்காக வேஷம் போடுகிறானா என்று அறிய. சுட்டாலும் சங்கு வெண்மை தருவது போல, பட்டாலும் இவர்கள் மேன்மக்கள் தானா என்று அறிய.
2. சோதனைக்கு முன்னர் நல்லவர்களது புகழ் குடத்திலிட்ட விளக்கு போல் இருக்கும். சோதனையை அவர்கள் வெற்றிகரமாக முடித்த பின்னர், அவரகளது புகழ் குன்றிலிட்ட விளக்கு போல மிளிரும்.

Wednesday, 5 September 2012

!!!அன்பே சிவம்!!!


அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்கிறார் திருமூலர். இறைவன் தூய அன்பின் வடிவமாக வீற்றிருக்கிறார். அது எங்ஙகனம் என்று எனக்கு தெரிந்த வரையில் அறிந்து, ஆராய்ந்து, உணர்ந்து எழுதிய பதிவே இது.

அன்பு:

எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பே, தூய அன்பாக (இறைவனாக) கருத தக்கது. பிரதிபலன் எதிர்பார்த்து, பிற்காலத்தில் உதவும் என்ற உள்நோக்கத்தில் செலுத்தும் அன்பானது வியாபாரம் ஆகும். பிற உயிர் தனக்கு தீங்கே செய்தாலும், அந்த உயிருக்கு அன்பு செலுத்தும் உள்ளத்தில் இறைவன் மகிழ்ந்து குடியிருப்பான். இப்பதிவில் நான் கூறும் அன்பு செலுத்துவது எல்லாம் துளியும் சுயநலமில்லாத அன்பாகும்.

அன்பின் வடிவங்கள்:

அன்பு செலுத்துவதற்கு வரைமுறை எதுவும் கிடையாது. உண்மையான அன்பு உள்ளே இருந்தால் அது எந்த வடிவத்திலும், எந்நேரத்திலும் வெளிப்படும். மனமொடிந்து இருப்பவருக்கு சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகள் கூட அன்பின் வடிவம்தான். பசித்த முகம் பார்த்து உணவு கொடுப்பதும், வெற்றி பெற்றவருக்கு முதுகில் கொடுக்கும் செல்லத்தட்டும், தேவையான (அ) அதிமுக்கியமான நேரத்தில் செய்யப்படும் உதவியும், நோயில் வாடுபவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனையும், உலகின் ஏதோ மூலையில் இறக்கும் உயிர்களுக்காக 2-நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதும் தூய அன்பின் சில வடிவங்களாகும். மேலும் பல வடிவங்கள் உண்டு.

அன்பிருக்கும் இடங்கள்:

இந்த பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி என்னவென்றால், “அது இருந்தால் இது இருக்காது. இது இருந்தால் அது இருக்காது. ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்க வாய்ப்பு இருக்காது.” அதுபோல அன்பு இருக்கும் இடத்தில் சுயநலம் துளியும் இருக்காது. சுயநலம் இருக்கும் இடத்தில் அன்பு துளியும் இருக்காது.

ஏனென்றால் தூய அன்பு ஒரு உள்ளத்திற்கு வந்து விட்டால், அது முதலில் துரத்தும் எதிரி சுயநலமாகும். அது மட்டுமல்ல, தூய அன்பு என்பது அழுக்காறு, அவாவெகுளி, இன்னாசொல் என்ற நான்கும் இல்லாத இதயத்தில் குடிகொள்ளும். சுயநலம் இருந்தால் இந்நான்கும் தானே வந்து குடிகொள்ளும். புரியவில்லையா? இதோ விளக்கம்.

பிற உயிர்களை தன் உயிர் போல நேசிப்பவனுக்கு மற்ற உயிர்களை (அ) மற்ற உயிர்களின் வளர்ச்சி/உடைமை/பொருள் கண்டு பொறாமைப்படும் அவசியம் இருக்காது. தூய அன்பிற்கு கொடுக்கத்தான் தெரியும். தன்னிடம் உள்ள பொருள் பிறருக்கு கொடுப்பதற்கே என்று எண்ணத் தூண்டும்.  ஆகையால் தன்னிடம் இருப்பதுவும் மற்றவர்க்கு சொந்தம் என்று நினைக்கும் மனதிற்கு ஆசை அறவே இருக்காது. தூய அன்பு கொண்ட உள்ளத்திற்கு கோபப்படவும் தெரியாது. கடுஞ்சொல் பேசவும் தெரியாது. எனது நலம் தான் முக்கியம் என்று எண்ணும் சுயநலமிக்க மனிதருக்கு இந்நான்கும் கண்டிப்பாக இருக்கும். பிறர் நலம் தான் முக்கியம் என்று எண்ணும் தூய அன்பு கொண்ட உள்ளத்தில் இந்நான்கும் இருக்காது.

சுயநலம் இருந்தால் அன்பு இருக்காது. அன்பு இருந்தால் சுயநலம் இருக்காது.

இறைவனை தரிசிக்கலாம்:

இறைவனை மிக எளிதில் தரிசிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு, வெற்றி பெற்ற தருணங்களை தவிர்த்து, தங்கள் வாழ்வில் நடந்த ஆனந்தமாய்/உள்ளம் உவந்த தருணங்களை நினைத்து பாருங்கள்.

அந்த தருணங்கள் கண்டிப்பாக நீங்கள் தூய அன்பை ஸ்பரிசித்த சமயமாக இருக்கும். அல்லது, நீங்கள் மற்றவரிடம் அன்பு செலுத்திய சமயமாக இருக்கும். மற்றவரிடம் அன்பு செலுத்தும்போது நம்மில் இறைவனை தரிசிக்கலாம். மற்றவர் நம்மீது அன்பு செலுத்தினால் அவர் உருவில் இறைவன் தரிசனம் கிடைக்கும்.

அதனால்தான், தூய அன்பு செலுத்தும் அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வமாக காட்சி அளிக்கிறார்கள். இறைவன் எல்லார் வீட்டிலும் இருக்க இயலாத காரணத்தினால், தனது சுயரூபமான அன்பின் மொத்த வடிவமாக தாயை ஒவ்வொரு வீட்டிலும் படைத்தான்.

பலருக்கு பால்ய பருவம் சுவைமிக்கதாக, ஆனந்தமயமாய் இருக்கும். அதற்கு காரணம் அன்பு / இறைவன் எப்பொழுதும் அருகினிலே இருப்பது. வயது ஏறஏற சுயநலம் ஆட்கொண்டு, அன்பு அகன்று விடுவதால் வாழ்வில் சுவையும், ஆனந்தமும் குறைந்து விடுகிறது.

சுயநலமற்ற அன்பு குடி கொண்ட இதயத்தில், இறைவனை தரிசிக்கலாம். ஆனந்தத்தை உணரலாம்.

பிறப்பின் நோக்கம்:-

நாம் அனைவரும் மனிதராய் பிறந்ததின் உண்மையான/அடிப்படையான நோக்கம், பிற உயிர்களிடத்தில் தூய அன்பு செலுத்துவதற்கே. பெரிய தலைவர்கள், மகான்கள் அனைவரும் வெவ்வேறு இலட்சியத்திற்காக, தமக்கென்று கொள்கைகள் கொண்டு போராடியிருக்கலாம். ஆனால் அவர்களை நெருங்கி, ஆராய்ந்து பார்த்தால், அடிப்படையில் தூய அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களே, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு,

·          இந்துக்களும், முஸ்லீம்களும் என்றும் ஒற்றுமையுடன், ஒருவொருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்று இறுதி மூச்சு வரை போராடியவர் காந்தி. “எதிராளியே ஆனாலும், அவனை இம்சிக்க கூடாது” என்ற அவரின் தூய அன்பின் வெளிப்பாட்டின் காரணமாக அவர் கையில் ஏந்திய ஆயுதம், அஹிம்சை.
·          அகில உலக அளவில் இந்து மதம் பற்றி அறிய வைத்தவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையின் முதல் வாக்கியம், “சகோதர, சகோதரிகளே!”. அடிமனத்தில் ஆழப்பதிந்து இருக்கும் அன்பின் வெளிபாடன்றி இது வேறு என்னவாக இருக்க முடியும்? அது மட்டுமன்றி, கர்ம யோகத்தைப்பற்றி இவர் எளிமையாய் சொல்வது இரண்டே வார்த்தைகள், ”சுயநலமின்றி உழைத்தல்.”
·          ஆறாம் வகுப்பு மட்டும் படித்து படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர் கர்மவீரர் காமராஜர். ‘படிக்கும் பாடம் மனதில் பதிய வேண்டுமென்றால், வயிற்றில் உணவு இருக்க வேண்டும். பசியுடனிருந்தால் படிக்கும் பாடம் மூளையில் ஏறாது’ என்று உணர்ந்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மனதில் இத்தகைய திட்டம் உருவெடுக்க, தாயன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்!
·          “கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுள் ஒரு கல்” என்று பெரியார் முரசு கொட்ட முக்கிய காரணம், சாதி. கடவுள் பெயர் சொல்லி சாதிப்பிளவு ஏற்பட்டது. சாதிப்பிளவினால் மேல் சாதியினர், கீழ்சாதியினரை அடிமைப்படுத்தியதை கண்டு பொங்கி எழ காரணமாயிருந்தது அவர் உள்ளிருந்த தூய அன்பே!
·          “வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் பாட காரணம், பயிரையும் தன்னுயிராக கருத வைத்த தூய அன்பே ஆகும்.
·          எல்லா மதங்களின் சாரத்தை பார்த்தாலும், “பிறர் உயிர்களிடத்தே அன்பு செலுத்து” என்றே தெரிய வருகிறது.

யுகங்களில் அன்பு:

முதல் யுகமான கிருத யுகத்தில் அன்பே பிரதானமாக இருந்த காரணத்தினால், சத்தியத்தால் நான்கு கால் பாய்ச்சலுடன் செல்ல முடிந்தது.

இரண்டாம் யுகமான, திரேதா யுகத்தில் பொறாமை நுழைந்து சத்தியத்தின் ஒரு காலை உடைத்தது. சுயநலம் தனது ஒரு காலை அடியெடுத்து வைத்தது. அதனால், சுயநலத்தின் காரணமாய் கைகேயி “பரதன் நாடாள வேண்டும். இராமன் காடேற வேண்டும்” வரம் கேட்டாள். தனது கணவனை இழந்தாள். இராவணனும், தனது சுகமே பிரதானம் என்று கருதி சீதையை கவர்ந்து சென்றான். சுயநலத்தின் காரணமாய், அறிவுரை கூறிய அன்புத்தம்பியை விரட்டினான். மற்றொரு தம்பியை இழந்து, மகனை இழந்து, அனைத்தும் இழந்து தன் இன்னுயிரையும் இழந்தான்!
மூன்றாம் யுகமான, துவாபரயுகத்தில் பொறாமை சத்தியத்தின் இன்னொரு காலையும் உடைத்தது. ஒரே குடும்பத்தினுள்ளே பொறாமை புகுந்து, சுயநலம் இரண்டு கால்களுடன் நின்றது. “ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன்.” என்று துரியோதனனை கூற வைத்தது, சுயநலமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தம்பிகள், நண்பன், உறவினர்கள் இழந்து தனிமையில் தன் இன்னுயிரையும் இழந்தான்.
நான்காம் யுகமான, துன்ப யுகமான கலியுகத்தில், தூய அன்பும் சத்தியமும் ஒற்றைக்காலுடன் நொண்டியடிக்கின்றன. சுயநலம், பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியன மூன்று காலுடன், முக்காலியில் அமர்ந்தது போல தீர்க்கமாய் உட்கார்ந்து உள்ளன. அதனால், கணவன் – மனைவிக்கிடையே, உடன்பிறந்த சகோதரர்க்கு இடையே, (சில குடும்பங்களில்) பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே, நண்பர்களுக்கிடையே அன்பு குறைந்து, சுயநலம் மேலோங்கியுள்ளது.

சுயநலத்தினால், இராவணன், துரியோதனன் அழிந்தது அறிவோம். அப்பாதை விடுத்து, பிறரிடத்தில் தூய அன்பு செலுத்துவோம். ஆனந்தமாய் வாழ்வோம். 

Friday, 10 August 2012

பரமனை பற்றுங்கள்

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
- திருமூலர்

உங்கள் வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெற விரும்பினால், சிவபெருமானைப் பற்றுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும்.

அறன் வலியுறுத்தல்

அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுண்மின் தலைப்பட்ட போதே.
- திருமூலர்


அடுத்தவரைப் பார்த்து வீண் பொறாமைக் கொண்டு அவரை அவதூறாகப் பேசாதீர்கள். தருமமற்ற வழியில் செல்லாதீர்கள். பெரும் கோபக்காரனாக மாறாதீர்கள். எந்நிலையிலும் அநியாய வழியில் பிறர் பொருளை அடைய நினைக்காதீர்கள். செல்வந்தனாக வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாராவது பசி என்று உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரு கரண்டி (தவ்வி) உணவையாவது மனமுவந்து இடுங்கள்.

நியமத்தில் நிற்பவன்

தூய்மை அருளூண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமி யீரைந்தும் நியமத்தனாமே
- திருமூலர்


நியமத்தில் நிற்பவனுக்கு அகம்-புறம் (1)தூயதன்மை, (2)அருள், (3)சுருங்கிய உணவு, (4)பொறுமை, (5)நேர்மை, (6)உண்மை, (7)உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்தும், (8)காமம், (9)களவு, (10)கொலை என்னும் இத்தீயவைகளை ஒதுக்குவதும் திருமூலர் கூறும் பத்து விதிகளாகும்.

சிவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை

சிவனோ டொக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தாமரையானே
- திருமூலர்

சிவாய நம

சிவாயநம வெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தமாமே
- திருமூலர்

‘சிவாய நம’ என்று உள்ளத்து வெளியே செல்லாது மனதை ஒருநிலை படுத்தி சொல்லி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கி, சிவத்துக்கு அடிமையாக்கி, ‘சிவாய சிவ சிவ’ என்று பலமுறை சித்தத்தில் எண்ணினால் அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும்.

ஐந்தெழுத்து காட்டும் அருள்நெறி

குருவழியாய குணங்களில் நின்று
கருவழியாய கணக்கை அறுக்க
வரும் வழிமாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவதுஞ் செழுத்தாமே
- திருமூலர்  

ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிகளுக்கு காரணமான வினைகளை ஒழிக்க, அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள்நெறியைக் காட்டுவது ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தாகும்.

இறப்பிற்கு பின்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
 - திருமூலர்

(தானம், தவம், தர்மம் செய்யாத) ஒருவர் இறந்த பின்னர், அவரது உறவினரெல்லம் கூடி, அழுதிட்டு, அவரை பிணம் என்று அழைத்து, இடுகாட்டில் வைத்து எரித்து விடுவர். எரிந்த சாம்பலை ஆறிலோ, கடலிலோ கலந்து அதனுடன் இறந்தவரை மறந்து விடுவர். மற்றவர்களுக்கு நன்மை ஏதும் செய்யாதவர்களுக்கு (இறப்பிற்கு பின்) ஏற்படும் நிலையை திரூமூலர் எடுத்துரைக்கிறார்.

Thursday, 9 August 2012

ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்துதம் அஞ்சகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்ஞாது இறைவனை எய்தலும் ஆமே.
- திருமூலர்.

அஞ்சகம் என்பது உடல். அடவி(குகை) என்பது மனம். ஐந்து சிங்கங்கள் என்பவை கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்பொறிகளாகும்.

ஒவ்வொரு மனிதனின் மனங்களுக்குள்ளும் ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. காட்டுக்குள் போய் மேய்ந்து விட்டுப்பின் இந்த ஐந்து சிங்கங்களும் தத்தம் மனமாகிய குகைக்குள்ளேயே வந்து தங்கி விடும். இந்த ஐந்து சிங்கங்களின் நகத்தையும், பல்லையும் அறுத்து எறிந்துவிட்டால் அஞ்சாமல் நாம் இறைவனை அடைந்திடலாம்.

ஐம்பொறிகளினால் ஏற்படும் ஆசைகளை நாம் இறைப்பற்றின் மூலம் அறுத்தெறிந்து விட்டால் கலங்காமல் நாம் இறைவனைக் காணலாம்.

இல்லறத்தில் துறவறம்

பள்ளம் முத்நீர் பழகிய மீன் இனம்
வெள்ளம் புதியவை காண விருப்புறும்
கள்ளவர் கோதையர் காமனோடு ஆடினும்
உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே
- திருமூலர்

ஆழமான நீர்நிலைகளில் இருந்து பழகிய தண்ணீருக்குள்ளேயே இருக்கின்ற மீன் இனங்கள் புதிதாக வந்த நீரிலே நீந்தித் திளைக்க விருப்பம் கொள்ளும். அதுபோல, இல்லற வாழ்வில் ஈடுபட்டு மங்கையுடன் கூடி இன்பமாக வாழ்ந்தாலும் உயர்ந்த குணமுடைய பெரியோர்களின் உள்ளமானது எப்பொழுதும் இறைவனிடம் கொண்ட பற்றை விடாது பற்றி இருக்கும்.

தாமரையின் தண்டு நீரில் மூழ்கி இருந்தாலும் அதன் இலையில் நீர் ஒட்டாதது போல, இல்லற வாழ்வில் திளைத்திருந்தாலும் ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல் வாழ இயலும். தன் மனைவி, மக்களுடன் இன்பமாய் வாழ்ந்து கொண்டே இறைவனடியார்களுக்குத் தொண்டு செய்து முக்தி அடைந்த ஞானிகள் - அப்பூதி அடிகளார், இளையான் குடிமாற நாயனார், தாயுமானவர்.

சித்தமெல்லாம் சிவமயம்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தம் சிவமாகவே சித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
-திருமூலர்

சித்தத்தில் இடையறாது சிவமந்திரம் ஓதி சிவமாகும் தன்மையர்க்கு வேறு எத்தவமும் செய்ய வேண்டியதில்லை. சித்தம் சிவமாகி பேரானந்தம் பொருந்திய அடியார்தம் உறவும் வாய்த்திடில் சித்தியும் உண்டு, முக்தியும் உண்டு. சிவனை எண்ணி சிவமாதலே தவத்தின் பயனாகும்.

தாச மார்க்கம்

எளிஅனல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பல் மஞ்சணம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
- திருமூலர்

மக்கள் அனைவரும் எளிதாகச் செய்யும் திருவிளக்கு ஏற்றுதல், பூக்களைப் பறித்துவந்து இறைவனுக்குச் சூட்டுதல், இறைவன் உறையும் திருக்கோயிலை அன்புடன் சாணமிட்டு மெழுகுதல், கோயிலுக்குள்ளிருக்கும் குப்பைகளை அகற்றுதல், வாயார இறைவனின் திருநாமத்தைப் பாடிப் பரவுதல், பூஜை நேரங்களில் கோயில் மணியை ஒலித்து இறைவனை வணங்குதல், பல வகையான திருமஞ்சனம், அபிஷேகப் பொருள்களை சேகரித்தல், கோயில் திருப்பணிகளில் இறங்குதல் போன்றவை இறைவனுக்கு அடிமையாக (தாசனாக) இருந்து நாம் செய்ய வேண்டிய செயல்களாகும். இவ்வெளிய செயல்களை நாம்  அன்றாடம் செய்வதால் இறைவனை அடையலாம் என்பதாகும்.

இறைவனை சகமார்க்கம், சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என நான்கு வழிகளில் வழிபடலாம். இவற்றுள் திருமூலர் மேற்காணும் பாடலில் சொல்லியிருக்கும் மார்க்கமானது இறைவனுக்கு அடிமையாய் இருந்து செய்யும் தாசமார்க்கமாகும்.