Thursday, 5 April 2012

இறைவனிடம் கேட்க வேண்டிய வரம்

இறைவா, நீயே எனக்கு தாயும்-தந்தையும் ஆவாய். நான் உனது செல்ல குழந்தை. உனது செல்ல குழந்தை ஆகிய  நான் கேட்டால் நீ எனக்கு எல்லாம் தருவாய். தாயின் கருணையுடன் எனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற நீ திருவன்பு கொண்டவள். அதே சமயம் தந்தையின் அறிவுடன், எனது நியாயமான ஆசைகளை மட்டும் நீ நிறைவேற்ற நீ திருவன்பு கொண்டவன். எனது கர்ம வினை கணக்குப்படி எனது தேவைகளை சரி வர பூர்த்தி செய்யும் என்னை படைத்தோர் நீவிர் ஆவீர்.

சிறு வயதில் குழந்தைகள் பார்ப்பது அனைத்தையும் கேட்கும். பெற்றோர்களும் அதை வாங்கி கொடுத்து ஆனந்தம் அடைவர். அதே குழந்தை பெரியவன் ஆனதும், பெற்றோர்கள் விரும்புவது வேறு. தன் குழந்தை தன்னை நினைப்பதையும், தன் அருகில் இருப்பதையும் அதிகம் விரும்புவர். அது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பெற்றோருக்கு தனது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வது சந்தோஷம் என்றாலும், குழந்தைகள் என்றும் தன்னை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் எப்பொழுதும் தான் குழந்தைகள் அருகில் இருக்க வேண்டும் என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஆகும்.

அது போல, படைத்தோனாகிய உன்னை நான் என்றும் மறவாமல், உன் அருகிலே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவன் நீ... உனது ஆசையை புரிந்து கொள்ளாமல் எனது ஆசை பெரிது என்று நினைத்து விட்டேனே? இத்தனை நாள் படைத்தோனாகிய உனது திருவன்பை மறந்து (நினைக்காமல்), திருவன்பினால் நீ கொடுக்கும் உலக சுகத்தை பெரிது என நினைத்து அறியாமையில் இருந்தேன்.

உனது ஆசையை நிறைவேற்ற எனக்கு வரம் தாரும் ஐயனே !!! உன்னை என்றும் மறவாமை வேண்டும். உனது நாமத்தை என்றும், எப்பொழுதும் சொல்லும், நினைக்கும் பாக்கியத்தை அருள வேண்டும்.

நீ இட்ட பணியை இவ்வுலகில் செய்து முடிக்கும் வரை நீ என் அருகில் இருக்க வேண்டும், முடிந்தவுடன் உன்னை அடைய வேண்டும். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தை தாயை காணும் சந்தோஷத்தில் செல்வது போல, நான் உன்னிடம் வர வேண்டும். படித்தலாகிய கடமையை முடித்து வரும் குழந்தையை பரிவன்புடன் தாய் ஏற்றுக்கொள்வது போல, நீயும் என்னை உன் அருகில் அழைத்து எப்பொழுதும் வைத்து கொள்ள வேண்டும்.